search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தோல்வி அடையும்"

    வெறுப்பு அரசியலால் பா.ஜனதா அரசு தோல்வி அடையும் என மாயாவதி கூறினார். #Mayawati #BJP
    தியோபந்த்:

    உத்தரபிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி, அஜித் சிங்கின் ராஷ்டிரீய லோக் தளம் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றன. இந்த கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் உத்தரபிரதேச மாநிலம் தியோபந்த் என்ற இடத்தில் நேற்று நடந்தது.

    கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி பேசியதாவது:-

    ‘காவலாளி’ கோஷத்தை பா.ஜனதா கையில் எடுத்து உள்ளது. இது வெற்று கோஷம். இதனால் எந்த பயனும் ஏற்படாது. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை பா.ஜனதா தவறாக பயன்படுத்துகிறது. கடந்த தேர்தலில் கூறிய வாக்குறுதிகளை அக்கட்சி நிறைவேற்றவில்லை.

    தேர்தல் அறிவிப்பு வெளியாகும் நேரத்தில் பா.ஜனதா அவசர, அவசரமாக பல்வேறு திட்டங்களை அறிவித்து உள்ளது. ஏழைகள் மீது பிரதமர் நரேந்திர மோடிக்கு உண்மையாக அக்கறை இருந்தால் முன்பே நலத்திட்டங்களை அறிவித்து தொடங்கி இருக்க வேண்டும். தற்போது பா.ஜனதாவுக்கு பயம் ஏற்பட்டு உள்ளது. அக்கட்சி ஆட்சியை விட்டு வெளியேறும் நேரம் வந்து விட்டது.

    காங்கிரஸ் கட்சி ஆளும் தகுதியை இழந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது. அக்கட்சி பல மாநிலங்களில் ஆட்சியை விட்டு அகற்றப்பட்டு விட்டது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் தருவதாக கூறும் திட்டத்தால் நாட்டில் வறுமை ஒழிந்து விடாது.

    நாட்டில் தற்போது ஊழல் பெருகி விட்டது. காங்கிரஸ் கட்சி மீது போபர்ஸ் ஊழல், பா.ஜனதா மீது ரபேல் ஊழல் என குற்றச்சாட்டு கறைபடிந்து உள்ளது. இரு கட்சிகளுக்கும் ஏற்கனவே பலமுறை வாய்ப்பு அளிக்கப்பட்டு விட்டது. எனவே மீண்டும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கி விடாதீர்கள்.

    சில கட்சிகள் தங்களுக்கு ஆதரவாக கருத்துக்கணிப்பு என்ற பெயரில் மக்கள் மீது கருத்து திணிப்பை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். அதை நம்ப வேண்டாம்.

    நாங்கள் ஏழை மக்களுக்கு குறைந்தபட்ச உதவித்தொகை வழங்குவதற்கு பதிலாக வேலைவாய்ப்பை வழங்குவோம். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வறுமையை ஒழிக்க 20 அம்ச திட்டத்தை கொண்டு வந்தார். அது நிறைவேற்றப்பட்டதா?

    நாங்கள் மற்ற கட்சிகளை போல ஆரவாரம் செய்யாமல் அமைதியாக வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். பா.ஜனதாவின் பிரிவினை சிந்தனையால் சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இட ஒதுக்கீடு பயன் அவர்களை முழுமையாக சென்றடையவில்லை.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளை கடனில் தத்தளிக்க விட மாட்டோம். அவர்களின் கடனை அடைப்போம். கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய தொகையை அளிப்போம்.

    வெறுப்பு அரசியலால் பா.ஜனதா அரசு தோல்வி அடையும். அந்த இடத்தை எங்கள் கூட்டணி பிடிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ×